பாதாள குழு செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கொல்ல வேண்டும் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
நாட்டில் அதிகரித்து வரும் படுகொலைகள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சியினருக்கும் இடையே கடும் தர்க்கம் நிலவியது.
அமைச்சரும்,ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க உரையாற்றுகையில்,
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிநாடுகளில் தலைமறைவாகி இருந்த பாதாள குழுத் தலைவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 2015ஆம் ஆண்டின் பின்னரான அரசாங்க காலத்தில் நாடு திரும்பியிருந்தனர். இவர்களை கோத்தாபய ராஜபக்ஷ காலத்தில் அடக்க முயன்ற போது, எதிர்க்கட்சியினர் பாதாள குழுவினரை கொல்வதாக எதிர்ப்புகளை வெளியிட்டனர்.
2022 ஆம் ஆண்டு போராட்ட களத்தில் பிரியாணி சாப்பிடுவதற்கு பணம் கொடுத்தவர்கள் பாதாள குழுவினரே. நாங்கள் பாதாள குழுக்களை அடக்க பாதுகாப்பு தரப்பினருக்கு உதவ வேண்டும் . பாதாள குழுக்களை ஒழிக்க வேண்டும். அவர்களை கொல்ல வேண்டும். இதற்காக அனைவரும் உதவ வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாஸ,
நாங்கள் பாதாள குழுக்களுக்கு ஆதரவாக செயற்படவில்லை. நாங்கள் அவ்வாறு அவர்களுக்காக முன்னிற்பதில்லை. மினுவாங்கொட பகுதியில் கப்பம் கோரும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இந்த சபையில் பலமுறை ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன், லசந்த விக்கிரமதுங்க ஆகியோரை கொலை செய்தவர்களை பிடிக்க வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்துகிறோம். படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் நெருங்கிய நண்பர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இந்த படுகொலை குறித்து அவர் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என கேள்வியெழுப்பினார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர,
இதன்போது எழுந்து உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர,
பாதாள குழுக்களை அடக்க நடவடிக்கை எடுத்த போது, இந்த பாராளுமன்றத்தில் அவர்களுக்காக கதைத்தவர்கள் இருக்கின்றனர். ஹன்சாட்டை எடுத்துப்பார்த்தால் அதனை தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த பாராளுமன்றத்தில் 225 பேரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டால் பாதாள குழுக்களை ஒழிக்க முடியும். போதைப் பொருளையும் ஒழிக்க முடியும். ஆனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்காக முன்னிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டத்தரணிகள் இருக்கின்றனர். இதனை நிறுத்த வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சி சுயாதீன அணி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,
ஊடகங்களில் வீடியொவொன்று தற்போது வெளியாகியுள்ளது. பொலிஸ் உயர் அதிகாரியொருவர் அண்மையில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பச்சைக்குத்தும் நபரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யும் வீடியோ வெளியானது. அப்படியென்றால் நீதிமன்றம் அவசியமில்லையே. இரகசியமாக செய்ய வேண்டிய சாட்சி பதிவு முழு உலகத்திற்கும் காட்டப்பட்டுள்ளது. ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்றார்.
இதனை தொடர்ந்து மீண்டும் எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த,
குற்றச் சம்பவமொன்று நடந்தால் அந்த இடத்தில் இருந்து முறையாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் சந்தேக நபரை கொண்டுவந்து விசாரணை நடத்துவதை எப்படி ஊடகத்தில் காட்ட முடியும். இது புதுமையான நாடுதானே. இப்படி குற்றவியல் வழக்கை முன்னெடுக்க முடியும். இந்த விடயம் தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றுகையில்,
எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றுகையில்,
இவ்வாறான விடயங்களை குற்றவாளியை விடுதலை செய்வதற்காகவே செய்கின்றனர். அந்த வீடியோவை நீதிமன்றத்தில் காண்பித்தால் குற்றவாளி விடுதலையாகிவிடுவார் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க,
இதன்போது எழுந்து உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க,
வெளியாகியுள்ள வீடியோவை பார்த்தால் பொலிஸார் தனியாக வாக்குமூலத்தை பெற்றுள்ளதுடன், பின்னர் ஊடகங்களை அழைத்து அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். சாட்சியாளருக்கு மறக்கும் விடயங்களை பொலிஸார் ஞாபகப்படுத்துகின்றனர். இதில் ஊடக நாடகம் இருக்கின்றது. இப்படியான சம்பிரதாயம் உருவானால் முறையான விசாரணை எப்படி நடக்கும் என்றார்.